டெல்லி, ஜூலை 28: லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன்படி, லோக்பால் விசாரணை வரம்பிலிருந்து பிரதமர் மட்டுமன்றி அரசு அதிகாரிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கோரி வருகிறார். இதற்காக அவர் டில்லியில் உண்ணாவிரதமும் இருந்தார். லோக்பால் மசோதா விசாரணை வரம்பிற்குள் பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் இருப்பவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது அவரது பிரதான கோரிக்கையாகும். இதற்காக ஜன லோக்பால் என்ற வரைவு மசோதாவையும் அவரது குழுவினர் தயாரித்தனர். இது குறித்து மத்திய அரசுத் தரப்பினருக்கும் அன்னா ஹசாரே குழுவினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்தப் பிரச்சனை குறித்து அடுத்து நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என மத்திய அமைச்சர் கபில் சிபல் கடந்த 22ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், லோக்பால் மசோதா அம்சங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடை பெற்றது. அன்னா ஹசாரே, மற்றும் அரசுத்தரப்பினர் தயாரித்த இரு வரைவுகளும் ஆராயப்பட்டன. லோக்பால் விசாரணை வளையத்திற்குள் பிரதரைச் சேர்ப்பது உள்ளிட்ட இருதரப்பு முரண்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பதில் தமக்கு ஆட்சேபம் இல்லை என்று மன்மோகன் சிங் கூறியதாகவும் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் அதை ஏற்கவில்லை என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, ‘ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவைத் தாக்கல் செய்யும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வலிமையான லோக்பால் சட்டத்தை அமல்படுத்தினால், நாடு முழுவதும் இந்த அரசுக்கு நன்றிக் கடன்பட்டதாக இருக்கும். எனவே, லோக்பால் மசோதாவை பலவீனப் படுத்தாமல், வலிமையான அம்சங்களுடன் நிறைவேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் என மத்திய அமைச்சரவையைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
ஆனால் அமைச்சரவைக் கூட்டம் அவரது வேண்டுகோளை ஏற்கவில்லை. லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பதில்லை. பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் அவர் லோக்பால் விசாரணை வரம்புக்குள் வருவார் என்று அது முடிவு செய்துள்ளது. லோக்பால் மசோதவிலிருந்து பிரதமருக்கு விலக்கு அளிக்கும் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி ஒருவர் இருப்பார். 8 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதன் விசாரணை வரம்புக்குள் அரசுஅதிகாரிகளும் சேர்க்கப்படவில்லை என்று செய்தித்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்
இந்த நிலையில் பிரதமரை உள்ளடக்கிய, வலுவான லோக்பால் வரைவு மசோதாவை வரைவை உருவாக்கக் கோரி ஆகஸ்ட் 16-ம் தேதியிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் அன்னா ஹசாரே ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Thanks for such innovative and astonishing information..Good here is really pleasant information.
by Homework Help provider